தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான்கோட்டத்தில் அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆட்சியர் கார்த்திகா. 
Regional03

சித்ரா பவுர்ணமி தினத்தில் - அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் நேற்று அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மொழி, விடுதலை, சமூகம் போன்றவற்றுக்காக பாடுபட்டவர்களை பெருமைப் படுத்தும் வகையில் தமிழகத்தில் அரசு சார்பில் 64 மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மணி மண்டபங்களில் ஆண்டு தோறும் அரசு சார்பில் பிறந்த நாள் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்டம் (மணி மண்டபம்) அமைந்துள்ளது. இக்கோட்டத்தில் பெண்பாற் தமிழ்ப்புலவர் அவ்வையார் மற்றும் மன்னர் அதியமான் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

சித்ரா பவுர்ணமி தினம் மன்னர் அதியமானின் பிறந்த தினமாகக் கருதப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில் அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சித்ரா பவுர்ணமி தினமான நேற்று, செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாட்டில் அதியமான் கோட்டத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் முழு உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, நல்லம் பள்ளி வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT