மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஆடி வீதியில் பக்தர்கள் பங்கேற்பின்றி சட்டத் தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாலையில் மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும், பிரியாவிடை, சுந்தரேசுவரர் அம்பாரி வாகனத்திலும் எழுந்தருளினர்.
பதினொன்றாம் நாளான நேற்று காலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஆடி வீதியில் சட்டத் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, மீனாட்சி அம்மன் ஒரு சட்டத் தேரிலும், பிரியாவிடை, சுந்தரேசுவரர் மற்றொரு சட்டத் தேரிலும் எழுந்தருளினர். பின்னர் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
மாசி வீதிகளில் கட்டுக்கடங்காத பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெறும் தேரோட்டம், கரோனா கட்டுப்பாடுகளால் கடந்தாண்டைப் போல் இந்த ஆண்டும் ஆடி வீதிகளில் நடைபெற்றது.
இன்று தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.