கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ஜெயராம், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் சவுரிபாளையத்தில் உள்ள அஹ்லே சுன்னத் ஜமாத்துக்குச் சென்றார். அங்கு முஸ்லிம் பிரமுகர்கள், இஸ்லாமிய இளைஞர்களுடன் கலந்துரையாடிய கே.ஆர்.ஜெயராம், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு கோரினார்.
தொடர்ந்து பீளமேடு செங்காளியப்பன் நகர், ரயில்வே பாலம், கருப்பண்ணன் கவுண்டர் லே அவுட், காந்தி மாநகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள் மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை எடுத்துரைத்த அவர், தான் வெற்றி பெற்றால் சாலை, சாக்கடைகள் சீரமைப்பு, குடிநீர் வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார். மேலும், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாகவும் கூறினார்.
செங்காளியப்பன் நகரில் உள்ள காய்கறி சந்தைக்குச் சென்ற கே.ஆர்.ஜெயராம், அங்கு வந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், அங்குள்ள காய்கறிக் கடையில் அமர்ந்து, பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்று, அதனுடன் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு கோரும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார். அவருடன், தமாகா நிர்வாகி வி.வி.வாசன், அதிமுக சவுரிபாளையம் பகுதி கழகச் செயலர் வெள்ளிங்கிரி, பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, நிர்வாகிகள் சிவக்குமார், பிரபாகரன், முத்துசாமி, சிங்கை ரங்கநாதன், வார்டு செயலர் சேதுராஜ், கருப்புசாமி, ஷாநவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.