ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. இது, திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த வனப் பகுதிகள், புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, செந்நாய், கரடி, வரையாடு, பல வகையான மான்கள், பலவகையான பறவைகள், விலங்குகள், அரிய வகை மூலிகைச் செடிகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. வெயிலால் ஏற்படும் காட்டுத் தீயால் வனத்துக்கும், வன உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உடுமலை வனத் துறையினர் கூறும்போது, ‘‘வறட்சிக் காலங்களில் ஏற்படும் காட்டுத் தீயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்படும். இந்த தீத் தடுப்புக்கோடுகள் வனப்பகுதியில் 5 முதல் 6 மீட்டர்அகலத்துக்கு அமைக்கப்படும். உடுமலை வனப்பகுதியில் சுமார் 10 கிமீ தொலைவுக்கு தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்படும். தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றனர்.