Regional03

மேற்கு மண்டல மாவட்டங்களில் - தேர்தல் விதிகளை மீறியதாக 468 வழக்குகள் பதிவு :

செய்திப்பிரிவு

கோவை மேற்கு மண்டல காவல் துறை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடந்த 25-ம் தேதி முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கோவையில் ஒருவர், ஈரோட்டில் 6 பேர், திருப்பூரில் 2 பேர், சேலத்தில் 3 பேர், நாமக்கல்லில் 2 பேர், கிருஷ்ணகிரியில் 4 பேர் என 18 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 60 ரவுடிகள் மீதும், ஈரோடு மாவட்டத்தில் 103 ரவுடிகள் மீதும், திருப்பூர் மாவட்டத்தில் 61 ரவுடிகள் மீதும், நீலகிரியில் 50 ரவுடிகள் மீதும், சேலத்தில் 133 ரவுடிகள் மீதும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 457 ரவுடிகள் என மேற்கு மண்டலத்தில் 941 ரவுடிகள் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஈரோடு மாவட்டத்தில் 5 பேரும், திருப்பூரில் 11 பேரும், தருமபுரியில் 4 பேரும், கிருஷ்ணகிரியில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 19 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மேற்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அனுமதி பெற்று பயன்பாட்டில் இருந்த 6,107 துப்பாக்கிகளை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில், அதன் உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 468 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கோவையில் 23, ஈரோட்டில் 25, திருப்பூரில் 80, நீலகிரியில் 20 வழக்குகள், சேலத்தில் 65 வழக்குகள், நாமக்கல்லில் 139 வழக்குகள், தருமபுரியில் 64 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறக்கும்படை, சிறப்பு படை சார்பில் சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பைத் தொடர்ந்து ரூ.2 கோடியே 72 லட்சத்து 67 ஆயிரத்து 320 தொகை, ரூ.80.16 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT