மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொட ர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கமல்ஹாசன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை. அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது தவறானது அல்ல. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஹேமலதா விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கமல்ஹாசன் மீதான வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு, கமல்ஹாசனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும் கமல்ஹாசன், உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் 2018-ல் நடைபெற்ற போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக என் மீது தூத்துக்குடி தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த போராட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் பேசவில்லை. சட்டத்தை மீறியும் நடக்கவில்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஹேமலதா விசாரித்தார். மனுதாரர் குறிப்பிட்டுள்ள வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். பின்னர் சிபிசிஐடி-யை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.8-க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.