சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மழை நீர் தேங்கியதால் மிளகாய் பயிர்கள் அழுகின.
இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம், சூராணம், இளையான்குடி, அ.திருவுடையார்புரம், தாயமங்கலம் பிர்க்காக்களில் 10 ஆயிரம் ஏக்கரில் முண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாலைக்கிராமம், சமுத்திரம், விரையாதகண்டன், முத்தூர், கபேரியேல்பட்டணம், கோட்டையூர், கரும்புகூட்டம், துகவூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் மழை நீர் தேங்கி ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிர்கள் அழுகிவிட்டன. இது குறித்து சாலைக்கிராமம் விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவழித்து மிளகாய் சாகுபடி செய்தோம். காய்கள் காய்க்கும் முன்பே செடிகள் அழுகின. மேலும் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மிளகாய் பயிர்களுக்கு இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கவில்லை. இந்தாண்டு எங்கள் பகுதியில் 70 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.