திருப்பத்தூர்: தகுதியான திருநம்பி மற்றும் திருநங்கையருக்கான மாணவர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு திருநங்கை மற்றும் ஒரு திருநம்பி மாணவர்களுக்கு மாணவர் உதவித் தொகையாக தலா ரூ.1 லட்சம் மற்றும் 1 பவுன் மதிப்பிலான தங்கப்பதக்கம் வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித்தொகை பெற உள்ள திருநங்கை மற்றும் திருநம்பி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் (அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்), பிளஸ் 2 தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (மாணவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஆதரவற்றோர் பள்ளிகளில் படித்தவர்களாக இருத்தல் வேண்டும்). ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப்படிப்பு (Regular College) கல்லூரியில் படித்து முதலாம் ஆண்டில் குறைந்த பட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் அரசு கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்காணும் மாணவர் உதவித் தொகைக்கு தகுதியான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், B-பிளாக் 4-வது தளம், வேலுார் மாவட்டம் என்ற அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.