தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ளவை உட்பட அனைத்து திட்டங்களையும் தற்போதைய அரசு நிறைவேற்றித் தரும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தருமபுரியில் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் நேற்று மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி எம்பி செந்தில்குமார், எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 912 பயனாளிகளுக்கு ரூ.10.95 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு தகவல்களை கேட்டறிந்த அமைச்சர், அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். கூட்ட முடிவில் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பொறுப்பேற்ற 6 மாதங்களில் புதிய திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. இதுவரை 500 வாக் குறுதிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சி வரிசையில் உள்ளவர்களும் தற்போதைய அரசின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் இந்த அரசு இயங்கி வருகிறது. மக்கள் பிரச்சினைகள், நலத் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார். இந்த அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்கள் நேரடியாகவும், முழுமையாகவும் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கேற்ப அதிகாரிகள் செயல்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நீர்ப் பாசன திட்டங்கள் உட்பட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சித் தேவையான திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றித் தரும்.இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலருமான மருத்துவர் வைத்திநாதன், தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் வசந்தரேகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், மாலையில் தருமபுரி அடுத்த கடகத்தூர் கூட்டு ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த, தருமபுரிமாவட்ட கூட்டுறவுத் துறையின் 68-வது கூட்டுறவு வார விழாவில் பங்கேற்று அமைச்சர் பேசினார்.