இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆட்சியர் பேசும்போது, “ மாணவர்களின் கற்றல் திறனை தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் வாயிலாக வலுப்படுத்த தன்னார்வலர்களின் பங்களிப்புடன் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு குமரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
கல்வித்துறை அலுவலர்கள், சமூகப்பணி ஈடுபாட்டாளர்கள் போன்றோருக்கு கடந்த வாரம் சென்னையில் இரு நாட்கள் பயிற்சிவழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட கருத்தாளர்கள், கல்வி அலுவலர்களுக்கு பயிற்சிவழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வி பொறுப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்களுக்கு வரும் 8-ம் தேதி இரு கட்டங்களாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தன்னார்வலர்களுக்கான பணிகளும், ஊக்கப்படுத்தும் செயல்பாடும், ஊர்கூடி தேர் இழுப்போம், இல்லம்தேடி கல்வி திட்டத்தை மக்கள் இயக்கமாக்குவோம், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மேலாண்மை குழுவின் பங்கு போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது” என்றார்.