தருமபுரி: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வீட்டுவசதி வாரிய வீடு பெற்று முழு தொகை செலுத்தியவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்படுவதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஓசூர் வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் எட்வின் சுந்தர்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர் உள்ளிட்ட இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரிவு மூலம் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு ஒதுக்கீடு பெற்று அதற்கான முழு தொகையையும் செலுத்தி முடித்தவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தொகை செலுத்தி முடித்த ஒதுக்கீடுதாரர்கள் உடனே ஓசூர் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய 04344-242306 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.