ஒகேனக்கல் காவிரியாற்றின் பிரதான அருவியின் எதிரே உள்ள பகுதி வரை கர்நாடக மாநில எல்லை வழியாக வந்து ஆபத்தான இடத்தில் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள். 
Regional02

காவிரியின் மறுகரையில் இருந்து ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் : கர்நாடக மாநில அதிகாரிகள் தடுக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா இரண்டாம் அலையை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவித்தபோது தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை அறிவிக்கப்பட்டது. அந்த தடை தற்போது வரை தொடர்ந்து அமலில் உள்ளது. இதற்கிடையில் தற்போது ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியைக் கடந்தாலே ஒகேனக்கல் காவிரியாற்றில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க தடை விதிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை. காவல் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

ஆனால், ஒகேனக்கல் காவிரியாற்றின் மறுகரை பகுதியான கர்நாடக மாநில வருவாய் எல்லையில் இருந்து பலரும் ஒகேனக்கல் பகுதிக்குள் வருகை தருகின்றனர். இவர்கள் ஆபத்தில் சிக்கும் முன்பாக இதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்தது:

ஒகேனக்கல் காவிரியாற் றில் அதிக வெள்ளப்பெருக்கு நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை ஆற்றோரங்களில் அனுமதித்தால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தான் நீர்வரத்து குறிப்பிட்ட அளவை கடந்ததும் யாரையும் ஆற்றோரம் அனுமதிப்பதில்லை. இருப்பினும், கர்நாடக மாநில எல்லையோரம் மாறுகொட்டாய், செங்கப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பரிசல் ஓட்டுநர்கள் அங்குள்ள கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளை பரிசலில் ஏற்றி ஒகேனக்கல் தொங்கு பாலம் வரை அழைத்து வருகின்றனர். இவ்வாறு வருவோரில் சில இளைஞர்கள் மது அருந்தி, விபரீதமான இடங்களில் செல்ஃபி எடுக்கின்றனர்.

அவ்வாறான இடங்களில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்தால் உயிருடன் மீட்பது அரிதான செயல். அவர்கள் வந்து செல்லும் பகுதி கர்நாடக மாநில எல்லையாக இருப்பதால் நம் எல்லையில் உள்ள அதிகாரிகளால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத சட்ட சூழல்கள் உள்ளன. எனவே, உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு குறிப்பிட்ட மாவட்ட அதிகாரிகளுடன் பேசி விபரீத சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

SCROLL FOR NEXT