கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35). இவர் மீது ஓசூர், கர்நாடக மாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மஞ்சுநாத்தை, உளிவீரனப்பள்ளியைச் சேர்ந்த சேத்தன் (23), சந்தீப் (21) ஆகியோர் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அடித்துக் கொலை செய்து, உடலை உளிவீரனப்பள்ளி இரும்பு கம்பெனி பின்புறம் உள்ள ஏரியில் புதைத்தது தெரிந்தது.
இதையடுத்து சேத்தன், சந்தீப் உள்ளிட்ட 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய உளிவீரனப்பள்ளியைச் சேர்ந்த மணி (20) என்பவரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.இதனிடையே நேற்று மஞ்சுநாத்தின் உடல், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் இளங்கோ, மத்திகிரி போலீஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் நிகழ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்து, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கைதான 3 பேரையும் நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தும் மத்திகிரி போலீஸார் விசாரணை நடத்தினர்.