ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும் மருத்துவருக்கு மிக உயர்ந்த இடமொன்று உண்டு. நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களை நாடி வருபவர்களுக்கு, சரியான சிகிச்சையினை அளித்து, நலம்பெற உதவுபவர் மருத்துவரே. மருத்துவப் பணியென்பது நேரம் காலம் பார்க்காமலும், அறிந்தவர், அறியாதவர் என்கிற பேதமின்றியும் தன்னலமற்று செய்யும் உயிர்க் காக்கும் அறப்பணியாகும்.
உலகையே ஊரடங்கினால் கரோனா பெருந்தொற்று முடக்கிய காலத்திலும், ஓய்வின்றி மருத்துவர்கள் ஆற்றிய பெரும் பணி போற்றுதலுக்குரியது. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல், கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவர்கள் செய்த சேவையினை உலகமே கண்டு நெகிழ்ந்தது. உயிர்க் காக்கும் மருத்துவரை, ‘தெய்வம் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்’ என்று சொல்லித்தானே நன்றியை நாம் வெளிப்படுத்துகின்றோம்.
1991-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மருத்துவர்களின் முக்கியத்துவம் பற்றியும், அவர்களது பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், மருத்துவத் தொழிலை இன்றைய நவீன அறிவியல் யுகத்திற்கேற்ப மேம்படுத்தும் எண்ணத்திலும் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதைகளுள் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் பிதான் சந்திர ராய். மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளைப் படித்த இவர், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றவர். நாடு சுதந்திரம் பெற்றதும், மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக, 14 ஆண்டுகாலம் பதவி வகித்தவர். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ஆம் ஆண்டு ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது. டாக்டர் பி.சி.ராயின் பிறந்த மற்றும் இறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த இனிய தினத்தில், கரோனாவுக்கு எதிரான களப்பணியில் உறுதியோடும் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டு, மக்களுக்கான ஆரோக்கியத்தை வென்றெடுத்து வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறோம்.