திருச்சி: திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவனம் அருகே கணேசா ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானா அளவில் மிகப் பெரியதாக இருப்பதால் அடிக்கடி லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற லாரி கணேசா ரவுண்டானாவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த திருவெறும்பூர் போலீஸார் நாமக்கலைச் சேர்ந்த ஓட்டுநர் சுப்பிரமணியை (60) மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், லாரியை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர்.
இந்த ரவுண்டானாவின் அளவை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில், இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கென சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தாமதமாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அதுவரை ரவுண்டானாவின் சுற்றளவை குறைத்து, விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.