தொப்பூர் கணவாய் பகுதியில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தருமபுரி ஆர்டிஓ தாமோதரன் தொடங்கி வைத்தார். உடன், தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரை உள்ளிட்டோர். 
Regional02

தொப்பூர் கணவாய் பகுதியில் அதிவேக வாகனங்களை - ரேடார் மூலம் கண்காணித்து ஆன்லைனில் அபராதம் விதிப்பு :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கண வாயில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பயணிக் கின்றன. இந்த வழித்தடத்தில் தொப்பூர் கணவாய் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த மலைச் சாலையில் பாளையம் சுங்கச் சாவடி முதல் கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில் வளைவு ஆகிய பகுதிகளை கடந்து தொப்பூர் சோதனைச் சாவடி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூர சாலை சவால் மற்றும் ஆபத்து நிறைந்த சாலையாக உள்ளது. கட்டமேடு முதல் தொப்பூர் வரையிலான 4 கிலோ மீட்டர் சாலை சரிவாக அமைந்துள்ளது. எனவே இப்பகுதியில் அதிவேக மாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதி யில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல வாகனங்கள் வேக வரம்பைக் கடந்து வேகமாக இயக்கப்படுகிறது.

எனவே, தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துகளை குறைக்க போக்குவரத்துத் துறை, காவல்துறை இணைந்து அதிவேகவாகனங்களை வேக ரேடார் கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர் இப்பணியை தொடங்கி வைத்தனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் கள் தரணீதர், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல் நாளில் 15 அதிவேக வாகனங்களைக் கண்டறிந்து தலா ரூ.1200 வீதம் ஆன்லைனில் இ-சலான் முறையில் அபராதம் விதித்தனர். இந்த நடைமுறையில் வாகனத்தின் புகைப் படம், வாகனம் குறிப்பிட்ட பகுதியில் இயக்கப்பட்ட வேகம் ஆகியவையும் குறிக்கப்பட்டு உரியவர்களுக்கு பதிவேற்றம் செய்யப் படுகிறது.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறும்போது, ‘தொப்பூர் கணவாய் மலைச் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை திடீரென நிறுத்தி தணிக்கை மேற்கொள்ள முயன்றால் விபத்துகள் நேர வாய்ப்புள்ளது. எனவேதான் நவீன ரேடார் கருவி மூலம் அதிவேகவாகனங்களை கண்டறிந்து இ-சலான் முறையில் அபராதம்விதிக்கப்படுகிறது. பதிவேற்றம்செய்த உடன் வாகன உரிமை யாளரின் செல்போனுக்கு அபராத விவரங்கள் குறுஞ்செய்தியாக சென்று சேருகிறது. இந்த அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனங்களுக்கு வரி செலுத்துதல், தகுதிச் சான்று, காப்புச் சான்று புதுப்பித்தல், உரிமை மாற்றம், தவணை கொள்முதல் உடன் படிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும்’ என்றார்.

SCROLL FOR NEXT