கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென மரணமடைந்ததையடுத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் மகன்பிரேம்குமார், கார் மெக்கானிக்இவரது மனைவி சுபா(28). கர்ப்பிணியான இவரை, நேற்று முன்தினம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தனர். நீர் சத்து குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, காலை 11 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில், சுபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
மாலை சுமார் 5 மணிக்கு சுபாவுக்கு குளிர் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது சகோதரி அங்கிருந்த செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரவு சுமார் 8 மணிக்கு சுபா உயிரிழந்தார்.
அதிகாலை 3 மணியளவில் உறவினர்களிடம் தெரிவிக்கா மல், சுபாவின் உடல் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சுபாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது உடலை உறவினர்களிடம் தெரிவிக்காமல் பரிசோதனைக்கு அனுப்பியதன் மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 9 மணிக்கு பிரேம்குமாரின் உறவினர்கள், இந்து முன்னணி, பாஜகவினர் அரசு மருத்துவமனை முன்புசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் டி.எஸ்.பி.(பொறுப்பு) முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, சுஜித் ஆனந்த், பத்மாவதி மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
தகவல் அறிந்து கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் முருகவேல், கோட்டாட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து பிரேம்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், நிலையமருத்துவர் பூவேஸ்வரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
சுகாதார பணிகள் இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்தப்படும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். அதன்அறிக்கை வந்த பின்னர் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். அரசு நிவாரண நிதி பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.