தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசலில் மொத்த வியாபார மீன் சந்தையும், தற்காலிக பேருந்து நிலையத்தில் சில்லறை வியாபாரமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மொத்த வியாபாரம் செய்யும் மீன் சந்தையில் கடந்த 2 நாட்களாக அதிகளவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடினர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், கரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரின் கவனத்துக்கு தெரியவந்ததால், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று கீழவாசல் மீன் சந்தையில் ஆய்வு செய்தார்.
அப்போது, வியாபாரிகளிடம் கரோனா பரவல் குறித்தும், தடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், கீழவாசல் மீன் சந்தையை தற்காலிகமாக மூடவும், அதற்கு மாற்று ஏற்பாடாக திலகர் திடல், கீழ் அலங்கம், கொடிமரத்து மூலை முதல் மாநகராட்சி பள்ளி வரை மீன் வியாபாரம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் பு.ஜானகிரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.