தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், "திருப்பூர் பின்னலாடைத் தொழிலை பொறுத்தவரை ஜூன் 28 முதல் ஜூலை 5-ம் தேதி வரையில் அனைத்து தொழில்களும் 33 சதவீத ஆட்களை கொண்டு இயங்க அனுமதி வழங்கியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால், இது முழுமையான மகிழ்ச்சியாக அமையவில்லை என்பதும் உண்மை. ஆரம்பத்தில் ஏற்றுமதிக்கு 10, 25, 50 சதவீத ஆட்களைக் கொண்டு இயங்கலாம் என்று அறிவித்தபோது, உள்நாட்டு உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்றுமதி தொழில் 100 சதவீத ஆட்களை வைத்து இயங்கலாம் என கடந்த 25-ம் தேதி அறிவித்தபோது, உள்நாட்டு உற்பத்தி 33 சதவீதம் ஆட்களைக் கொண்டு இயங்க அனுமதிக்கப்பட்டது. இனி 50 சதவீத ஆட்களைக் கொண்டு இயங்கலாம் என்று அனுமதியை உயர்த்தினாலும், ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பிவர ஆர்வம் காட்டமாட்டார்கள். எனவே, தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், தொழில்முனைவோரின் பொருளாதார நிலைமையும் சீராக வேண்டுமானால், 100 சதவீத ஆட்களைக் கொண்டு உள்நாட்டு பனியன் தொழில் இயங்க அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.