திருப்பூரில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு - மீன், இறைச்சி, காய்கறி கடைகளில் திரண்ட மக்கள் : சமூக இடைவெளியை பின்பற்றாததால் தொற்று பரவும் அபாயம்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, திருப்பூரில் சந்தை மற்றும் கடை வீதிகளிலுள்ள மீன், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்காததால் தொற்று பரவலுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் ஒன்று. தொற்று பாதிப்பில் வகை-1-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திருப்பூரில், தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கூடுதல் தளர்வுகளை கடந்த 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதில் காய்கறி, இறைச்சி உள்ளிட்டஅத்தியாவசியப் பொருட்கள்விற்பனைக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருப்பூரில் பல்லடம் சாலை காய்கறி சந்தை, தென்னம்பாளையம் பகுதியிலுள்ள காய்கறி சந்தை மற்றும் உழவர் சந்தைகள், மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் பொருட்கள் வாங்க திரண்டனர்.

திருப்பூர் - பல்லடம் சாலையில் புதிய பாலம் நிறைவு பெறும் இடம் தொடங்கி, தென்னம்பாளையம் சந்திப்பு வரை சாலையில் இருபுறங்களிலும் காய்கறி, பழங்கள், கீரை விற்பனை கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன. தென்னம்பாளையம் உழவர் சந்தை, அருகே மொத்த காய்கறி சந்தை, சில்லரை வியாபார சந்தை, இறைச்சி விற்பனை நடைபெறும் பகுதி எனஅனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், வாகன நெரிசலும் ஏற்பட்டது. சந்தையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

தென்னம்பாளையம் மீன் சந்தைக்கு ஏராளமான மக்கள், சில்லரை வியாபாரிகள் வரத்தொடங்கியதால், முன்னெச்சரிக்கையாக சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு,அருகே மாற்று இடத்தில் சில வியாபாரிகள் மட்டும் மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அங்கும் போக்குவரத்து தடைபடும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியது. தென்னம்பாளையத்தில் மீன் கிடைக்காதவர்கள், காங்கயம் சாலை சிடிசி சந்திப்பு பகுதியிலுள்ள கடைகளுக்கு படையெடுத்தனர். அப்பகுதியிலுள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இது தவிர, குமார் நகர், பங்களா நிறுத்தம், பெரியார் காலனி, திருமுருகன்பூண்டி, பார்க் சாலை சந்திப்பு உட்பட மீன் வியாபாரம் நடைபெறும் பிற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து திருப்பூர் - பல்லடம் சாலையை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியம் கூறும்போது, "தற்போது தான் கரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து, மக்கள் வெளியில் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் இவ்வாறு தொடர்ந்து கூடினால், மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. விலை குறைவாக கிடைக்கும் என்பதாலேயே மொத்த விற்பனை இடங்களை தேடி வருகின்றனர். அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் மக்கள் வசிக்கும் இடங்களில் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்