Regional02

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாருக்கு விற்கக் கூடாது : வைகோ வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 1937 பிப்ரவரி 10-ம் தேதி சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மு.சி.த.மு.சிதம்பரம் செட்டியாரால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடங்கப்பட்டது. 1969-ல் நாட்டுடைமையாக்கப்பட்ட இந்த வங்கிக்கு தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், குக்கிராமங்களில் 1,500 கிளைகள் உள்ளன. 15 மண்டல அலுவலகங்களும் உள்ளன.

கிராமப்புற மக்களுக்கு, குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ஆகியவற்றை ஐஓபி வழங்கி வருகின்றது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும் இதன் கிளைகள் உள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஐஓபி வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது.

கடந்த 2005-ல், ஐஓபி வங்கியை வடமாநில வங்கியுடன் இணைக்க திட்டமிட்டபோது கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது ஐஓபி வங்கியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இது தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட புதிதாக தோற்றுவிக்காத மத்திய பாஜக அரசு, ஏற்கெனவே இருக்கும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க முயற்சிப்பது பெருங்கேடாகும். தனியார் புதிதாக வங்கிகளைத் தொடங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, ஐஓபி வங்கியை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT