கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, 3-வது நாளாக நேற்று கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த 5-ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக, 2 லட்சத்து, 35 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போடப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று, டோக்கன் பெற்று ஊசி போட்டு வந்தனர். குறிப்பாக ஒரே நாளில் அதிகபட்சமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் எங்கும் தடுப்பூசிகள் போடாததால், பொதுமக்கள் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று, தடுப்பூசிகள் இல்லை என்ற அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தினமும் 4 பேருக்கு மேல் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், தடுப்பூசிகள் காலியானதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தி தடையின்றி தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறும்போது, நாளை அல்லது மறுநாள் முதல் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE