தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி வீடுகளில் சளி, காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து விவரம் சேகரிக்கும் நகராட்சி பணியாளர்கள். 
Regional02

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்நகராட்சி சார்பில் விவரம் சேகரிப்பு :

செய்திப்பிரிவு

தருமபுரி நகராட்சி பகுதியில் காய்ச்சல், சளி உள்ளவர்கள் குறித்து நகராட்சி பணியாளர்கள் விவரம் சேகரித்து வருகின்றனர்.

தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 75 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளதா தருமபுரி நகராட்சி நிர்வாகம் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 70 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தருமபுரி நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் விவரங்கள் சேகரித்து வருகின்றனர்.

இதுதவிர, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள உறுப்பினர்கள், அவர்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரம், செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர் மற்றும் வயது விவரம் போன்றவற்றை இப்பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். இத்தகவல் சேகரிப்புப் பணிகளை நேற்று தருமபுரி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் குறித்து சேகரிக்கப்படும் விவரங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த விவரங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கூடுதல் வசதிகள் தேவை எனில் உருவாக்கப்படும்.

அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், போட்டுக் கொள்ளாதவர்கள் குறித்து சேகரிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் பகுதி வாரியாக சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT