திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள மோரை ஊராட்சியில் ரூ.75.91 லட்சம் மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி சமீபகாலமாக நடந்து வந்தது. அப்பணி முடிவுக்கு வந்ததையடுத்து அதை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பாடியநல்லூர் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வழங்கும் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் சுதர்சனம், துரை.சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொற்று படிப்படியாக குறைவு
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், கடந்த 25 நாட்களில் படிப்படியாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்புநாள்தோறும் 1,400 முதல் 1,500 வரை இருந்த தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 10 நாட்களில் படிப்படியாக குறைந்து வருகிறது.
மேலும், தமிழகத்தில் கரோனாபரவல் 3-வது அலை வந்தாலும்அதை எதிர்கொள்ள அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.