மலையில் கால்நடைகளை மேய்க்க அனுமதி கோரி மேகமலை வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே பொம்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், அப்பகுதியில் உள்ள காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த வனத்துறையினர், அனுமதியின்றி மாடுகளை காட்டில் மேய்த்ததாகக் கூறி சுரேசை கைது செய்தனர்.
இதைக் கண்டித்து தேனி மாவட்ட விவசாயச் சங்கச் செயலாளர் கண்ணன் தலைமையிலான பொதுமக்கள் மேகமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தேனி மாவட்ட மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் கடமலைக்குண்டு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மலை கிராமங்களில் வசிப்போருக்கு கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. எனவே, மலை கிராம மக்கள் அனைவரும் வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக்கொள்ள வனத்துறையினர்அனுமதி வழங்க வேண்டும். சுரேஷ் மீது எந்த வழக்கும் பதியாமல்விடுதலை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர். வனத்துறையினர் கூறுகையில், மலைமாடுகளை மேய்க்க அனுமதிஅட்டை வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.