ஆம்பூர் திமுக வேட்பாளர் வில்வ நாதன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள வில்வ நாதன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவித்த உடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வில்வநாதன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆம்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு நேற்று காலை வந்தார்.
அங்குள்ள பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, அங்கிருந்து ஊர்வலமாக ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற வில்வநாதன், ஆம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரான கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்றுப் வேட்பாளராக பத்மாவதி என்பவர் வேட்புமனு அளித்தார். அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் பாசித், காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் விஜயஇளஞ்செழியன், காங்கிரஸ் நகரத் தலைவர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.