பென்னாகரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 402 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் பெண் ஒருவரை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கே.குள்ளாத்திராம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தருமபுரி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஆய்வாளர் பாரதி மோகன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மாது என்பவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தேர்தல் நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பெறும் நோக்கத்துடன், மாதுவின் மனைவி மகேஸ்வரி (38) மது பாட்டில்களை பதுக்கி வைத்தது விசாரணையில் தெரிய வந்தது. எனவே, அவரை கைது செய்த போலீஸார், 402 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.55 ஆயிரம் என போலீஸார் தெரிவித்தனர். மாவட்டத்தில் வேறு யாரேனும் மதுபானங்களை பதுக்கி விற்க முயன்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர்.