கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக திறக்கப்பட்டிருந்த பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் வரும் 15-ம் தேதி அடைக்கப்படுகின்றன.
குமரி மாவட்டத்தில் கும்பப்பூ நெல் அறுவடைப் பணிகள் நிறைவடையும் தருவாயைஎட்டியுள்ளது. தாமதமாக பயிரிடப்பட்ட பயிர்களுக்கு பாசன நீர் விநியோகம் செய்யப்படுகிறது. வழக்கமாக மண்டைக்காடு கோயில் மாசி கொடைவிழா நிறைவடைந்ததுமே அணைகள் அடைக்கப்படுவது வழக்கம். இந்தஆண்டு நெற்பயிர்களை காக்கும் வகையில் இந்தமாத இறுதிவரை பாசன நீர் விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து பேச்சிப்பாறையில் இருந்து விநாடிக்கு 867 கனஅடி, பெருஞ்சாணியில் இருந்து 190 கனஅடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிற்றாறு ஒன்றுஅணை ஏற்கெனவே அடைக்கப்பட்டது. இந்நிலையில் நெற்பயிர்கள் அறுவடையாகும் பருவத்தை எட்டியுள்ளதாலும், கடைமடை பகுதிக்கும் பாதிப்பு நீங்கியுள்ளதாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வருகிற 15-ம் தேதிமூடப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவினர் செய்து வருகின்றனர். தற்போது, பேச்சிப்பாறையில் 38.90 அடியும், பெருஞ்சாணியில் 53.50 அடி தண்ணீரும் உள்ளது.