Regional02

வாதிரியார் சமுதாயத்தினர் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துடன் தங்களை இணைக்க கூடாது எனக் கூறி தூத்துக்குடியில் வாதிரியார் மகாஜன சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வாதிரியார் மகாஜனசங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தென் மாவட்டத்தில் உள்ள வாதிரியார் சமுதாய மக்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு வாதிரியார் மகாஜன சங்கத்தினர் தூத்துக்குடி சில்வர்புரத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மகாஜனசங்கத் தலைவர் ஆத்திமுத்து தலைமை வகித்தார். செயலாளர் தர்மநாதன், பொருளாளர் தபராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த அச்சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.

வாதிரியார் சமுதாய மக்களின் விருப்பத்துக்கு மாறாக அச்சமூகத்தை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சேர்க்கக் கூடாது. அதனை மீறி மத்திய, மாநில அரசுகள் சேர்த்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதோடு, வாக்குபதிவு நாளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT