நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் வந்தால் கடலோர மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். எனவே, அத்திட்டத்தை வர விடமாட்டோம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் அமையும் என்ற அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த துறைமுகம் அமைந்தால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன், மீன் உற்பத்தி அடியோடு குறையும் என்பதால் எனது தந்தை வசந்தகுமார் அதனை எதிர்த்தார். எனவே, இந்த துறைமுகத்தை வர விடமாட்டோம்.
ஏற்கெனவே விவசாயிகளை வஞ்சித்த மத்திய அரசு தற்போது பெட்ரோல் விலை உயர்வின் மூலம் பொதுமக்களையும் வாட்டி வதைக்கிறது. ராகுல் காந்தியின் வருகையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.