Regional01

புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக் கோரி : வாழப்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் மறியல் :

செய்திப்பிரிவு

சேலம்: புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக் கோரி வாழப்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாமாஞ்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 165 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளதாலும், மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் தண்ணீர் ஒழுகுவதாலும் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நடவடிக்கை இல்லை.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வாழப்பாடி-திருவண்ணாமலை செல்லும் மாமாஞ்சி பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வாழப்பாடி டிஎஸ்பி முத்துசாமி, ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT