ஈரோட்டில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம் : கொசு உற்பத்திக்கு காரணமான கட்டிடங்களுக்கு அபராதம்

ஈரோடு மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகும் வகையில் நீரினைத் தேக்கி வைத்த 4 கட்டிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொடர் மழை நீடித்து வரும் நிலையில், பலருக்கும் வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டு வருகிறது. சுத்தமான நீரில் உற்பத்தியாகும் ஏடிஎஸ் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும்என்பதால், அவை உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும், நாள்தோறும் கொசுமருந்து அடித்தல் மற்றும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது;

நகரப் பகுதியில் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, டெங்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தீவிர காய்ச்சலால் தற்போது 8 பேர்அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வகை காய்ச்சல் பாதிப்பு என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர் மழை காரணமாக வாரத்திற்கு இருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்படுகிறது. அவர்கள் வசிக்கும் இருப்பிடத்தைச் சுற்றிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஎஸ் கொசு உற்பத்தியைத் தடுக்க வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதோடு, நீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்க வைத்துள்ளவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இரண்டாவது முறையும் அலட்சியமாக இருந்தால், அவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கிறோம். நேற்று முன்தினம்மாநகரில் நான்கு கட்டிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE