முல்லை பெரியாறு அணையின் பலம் குறைந்து விட்டதாகக் கூறி கேரள அரசும் அங்குள்ள அரசியல்வாதிகளும் தொடர்ந்து பொதுமக்களிடம் வதந்திகளை பரப்பி வருகின்றனர். வல்லுநர் குழு பலமுறை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று கூறியும் இந்நிலை மாறவில்லை. புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் கேரளாவில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வரும் 21-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநில பொதுச் செயலாளர் கே.சுதாகர் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. வண்டிப்பெரியாறு முதல் வாழாடி வரை சுமார் 3 கி.மீ. தூரம் இப்போராட்டம் நடைபெறும். கேரள மக்களுக்கு பாதுகாப்பு, தமிழக மக்களுக்கு தண்ணீர் என்ற கோஷத்தை முன்னிறுத்தி போராட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.