Regional01

குழந்தைத் திருமணம் நடத்தியதாக 20 பேர் கைது : நாமக்கல் மாவட்ட காவல் துறை நடவடிக்கை :

செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகளவில் நடைபெறுவதாக காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உத்தரவிட்டார். இதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் காவல் உட்கோட்டத்தில் 9, திருச்செங்கோடு உட்கோட்டத்தில் 3, பரமத்தி வேலூரில் 8 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றது கண்டறியப்பட்டது.

அனைவரும் 17, 16, 15 மற்றும் 14, 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைத் திருமணங்களுக்கு காரணமான பெற்றோர், உறவினர் என மொத்தம் 20 பேரை குழந்தைத் திருமண தடைச்சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தைத் திருமணம் தொடர்பாக 1098, 100 மற்றும் நாமக்கல் காவல் கட்டுப்பாடு அறை எண் 94981-81216, தனிப்பிரிவு எண் 94981-01020, 04286 - 280500 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT