Regional01

கந்தர்வக்கோட்டை அருகே விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2.97 லட்சம் மோசடி :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவர், புதுநகரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவரிடம், வேளாண் துறை அலுவலர் பேசுவதாகவும், வங்கிக் கணக்கு புதுப்பிக்க வேண்டியுள்ளதாகவும் கூறி, அவரது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை கேட்டு வாங்கிய மர்ம நபர் ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரைத் தொடர்ந்து, புதுக்கோட்டை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சைபர்கிரைம் போலீஸார் கூறியபோது, ‘‘வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் புதுப்பிப்பது தொடர்பாக வங்கி நிர்வாகத்தில் இருந்து செல்போனுக்கு தொடர்புகொண்டு யாரும் ஓடிபி கேட்பதில்லை. இவ்வாறு கேட்டாலும் யாரும் தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இதே குற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT