Regional01

‘நமக்கு நாமே’ திட்டத்தில் பங்கேற்று : மக்கள் நலப்பணி மேற்கொள்ள அழைப்பு :

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் பங்கேற்று மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள நிறுவனங்கள், சமூக நல அமைப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘நமக்கு நாமே’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டு, ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்.ஆர். நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும். பூங்கா அமைத்தல், நீர் நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மேம்பாடு, மரக்கன்று நடவு செய்தல், நவீன தெரு விளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள், மின் மயானங்கள் அமைத்தல், சாலைகள், சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம்.

நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நல திட்டத்தை தேர்வு செய்து அதற்கான விண்ணப்பத்தை மாநகராட்சி ஆணையர் அல்லது மாநகரப் பொறியாளரிடம் வழங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாநகரப் பொறியாளரை நேரிலோ அல்லது 8190000200 என்ற அலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு பேசலாம். அதோடு commr.coimbatore@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT