இளைஞர்கள் திறன் பெற்றவராக உருவாக வேண்டும் : குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை

By செய்திப்பிரிவு

இளைஞர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவதுடன் மட்டுமில்லாமல், திறன்பெற்றவர்களாகவும் உருவாக வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் இருங்களூரில் எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று சென்னை ஆளுநர் மாளிகையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியது: எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பிற திறன்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்தியாவின் உயர்கல்வி வளர்ச்சிக்குதனியார் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. உயர்கல்வியில் திறமையான இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் நாடு வளர்ச்சி பெறும். ஒவ்வொரு தனியார் உயர்கல்வி நிறுவனமும் திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க முற்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதையை உருவாக்கும்.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 கோடி பொறியாளர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியே வருகின்றனர். இவர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே திறன்மிக்க இளைஞர்களாக வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுகின்றனர்.

எனவே, மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக வைக்காமல், திறன்மிக்கவர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

திருச்சி வளாகத்திலிருந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரும், பெரம்பலூர் தொகுதி எம்.பியுமான பாரிவேந்தர் பேசியது:

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களில் 75 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் மட்டும் 53 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இக்கல்விக் குழுமம் 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவை ஆற்றி வருகிறது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் கல்வி, கலாச்சாரம் அனைத்து நாடுகளிலும் உயர்ந்து நிற்கிறது.

திருச்சி இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் 150 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்பல்கலைக்கழகத்தின் மூலம் 8,500 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி வளாகத்தில் எஸ்ஆர்எம் குழுமத்தின் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத் தலைவர் ஆர்.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக, எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலை. தலைவர் நிரஞ்சன் வரவேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்