ரயில்வே துறை சாதாரண பயணிகள் ரயில்களை இயக்காத தால் நாடு முழுவதும் அடித்தட்டு, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டி ரயில்களை இயக்கிட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியதோடு நானும், வடசென்னை எம்பி கலாநிதியும் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இந்நிலையில், பயணிகள் ரயில்களான மெமு, டெமு மற்றும் பாரம்பரிய பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக, அதற்கான கால அட்டவணைகளை ஆக.16-க்குள் அனுப்பி வைக்க அனைத்து ரயில்வே நிர்வாகங்களையும் ரயில்வே வாரியம் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயின் அனைத்துக் கோட்டங்களிலும் கால அட்டவணைகளைத் தயாரித்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் அனைத்துக் கோட்டங்களும் அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளன. விரைவில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.