திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோர். படம்: எஸ்.கோபு 
Regional01

பிஏபி நான்காம் மண்டல பாசனத்துக்காக - திருமூர்த்தி அணையிலிருந்து ஆக.3-ல் தண்ணீர் திறப்பு :

செய்திப்பிரிவு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், பகிர்மானக் குழு தலைவர்கள் கோபால், ஈஸ்வரன், வரதராஜன், அருண், ஜெயபால், நல்லதம்பி மற்றும் பாசன சபை தலைவர்கள் பங்கேற்றனர்.

பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பு, எதிர்பார்க்கக்கூடிய நீர்வரத்து, ஆழியாறு படுகை பாசனத்துக்கு தேவையான நீரளவு, குடிநீர் பயன்பாட்டுக்கான நீரளவு, இரு மாநில ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வழங்க வேண்டிய நீரளவு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 135 நாட்களில் உரிய இடைவெளிவிட்டு 5 சுற்றுகளுக்கு 9,500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் வழங்க இயலும். எனவே, 5 சுற்று தண்ணீர் வழங்க அரசின் ஒப்புதல்பெற கருத்துரு அனுப்பலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், உயர்மட்ட கால்வாய்கள் வழியாக வழங்கப்படும் தண்ணீரால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 95,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுவதால் மக்காச்சோளம், வெங்காயம், காய்கறி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT