இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, சரள் பென்ஷன் என்ற ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் பங்குச் சந்தையுடன் இணையாத, ஒற்றை பிரீமிய ஆண்டளிப்பு திட்டமாகும். இத்திட்டம், இந்தியக் காப்பீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏ) வழிகாட்டுதல்படி, அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பொதுவான விதிமுறைகளுடன் வழங்கப்படும் உடனடி ஓய்வுதிய திட்டமாகும்.
இத்திட்டத்தில், பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி தனி நபராகவோ அல்லது இருநபர் இணைந்தோ ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். இரு நபர் இணைந்து இத்திட்டத்தில் சேர்ந்தால், ஏதேனும் ஒரு நபரின் இறப்புக்கு பிறகும் மற்றொரு நபர் ஓய்வூதியம் பெறலாம்.முடிவில் செலுத்தியத் தொகையை நூறு சதவீதம் திரும்பப் பெறும் வசதி உள்ளது.
இத்திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 40 வயதும், அதிகபட்சமாக 80 வயதும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை வருடத்துக்கு ரூ.12 ஆயிரமும், ஓய்வூதியத் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணையில் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் சேருபவரின் வயது மற்றும் ஓய்வூதியம் பெறும் தவணை முறையைப் பொறுத்து பிரீமியம் செலுத்தும் தொகை மாறுபடும். அதிகபட்ச பிரீமியம் செலுத்துவதற்கான வரம்பு இல்லை என்பதால், எவ்வளவு பிரீமியம் வேண்டுமானாலும் செலுத்தலாம்.
இத்திட்டத்தில், www.licindia.com என்ற இணையதளம் மூலம் நேரிடையாகவும் அல்லது முகவர் மூலமும் சேரலாம் என எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.