டிஏபி உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 140 தனியார் மற்றும் 125 கூட்டுறவு சங்க விற்பனையகங்கள் என மொத்தம் 265 உர விற்பனைக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி), சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் போன்ற பல்வேறு வகை உரங்கள் விற்கப்படுகின்றன. தற்போது டிஏபி வகை உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறும்போது, ‘‘டிஏபி உரம் சரிவர கிடைப்பதில்லை. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை டிஏபி உரம் ரூ.1,200-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில தனியார் கடைகளில் அதிக விலைக்கு டிஏபி உரங்கள் ரகசியமாக விற்கப்படுகின்றன. அதேபோல, சில கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் உரம் விற்கப்படும், பயிர்கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் உரம் விற்கப்படும் என்கின்றனர். இப்பிரச்சினையை சரி செய்து, அனைத்து விவசாயிகளுக்கும், தட்டுப்பாடு இல்லாமல், அரசு நிர்ணயித்த விலைக்கே டிஏபி உரம் கிடைக்க, வேளாண்மைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
மாவட்ட வேளாண்மைத் துறை உயர் அதிகாரி கூறும்போது, ‘‘மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 600 டன் டிஏபி உரம் சில தினங்களுக்கு முன்னர் கோவைக்கு வந்தது. அவை உர விற்பனையகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. உறுப்பினர், உறுப்பினர் அல்லாதவர் என பாகுபாடுகாட்டாமல், விவசாயிகள் கேட்கும் உரங்களை, தடையின்றி தர வேண்டும், அரசு நிர்ணயித்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு உரம் விற்ற 3 கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கு உர விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.