நாமக்கல்: பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 13 காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் பெண்களுக்கு உதவ ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் உதவி தேவைப்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கவும், காவல்துறைக்கும் சமுதாயத்துக்கும் இடையேயான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் உதவி மையம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.