சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சென்னை எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
சென்னையில் தற்போது தினமும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதை 1,146 மில்லியன் லிட்டர் அளவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ள 35 ஆயிரம் தெருக்களில், குடிநீர் குழாய் அமைப்பு இல்லாத 8 ஆயிரத்து 600 தெருக்களுக்கு குடிநீர் குழாய் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விரைவுபடுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
கழிவுநீர் கட்டமைப்புகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும். மேட்டூர் அணையில் மழைக்காலங்களில் உபரியாக வெளியேறும் நீரை சென்னைக்கு கொண்டு வர புதிய திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னைக் குடிநீர் வாரியத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.