கோவையில் கரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகளவில் இருந்தது. கோவை மாநகராட்சி சார்பில் 12 மின் மயானங்களில் சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், சரவணம்பட்டியில் 2 மயானங்கள், சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், வீரகேரளம், துடியலூர், பீளமேடு, ஆத்துப்பாலம், சொக்கம்புதூர், போத்தனூர், சித்தாபுதூர் ஆகிய இடங்களில் தலா ஒரு மின் மயானம் ஆகியவற்றில் முழு நேரமும் உடல்களை எரியூட்ட மாநகராட்சி அனுமதித்துள்ளது. உடல்களை தகனம் செய்ய மாநகராட்சி மின் மயானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் அனைத்து மின் மயானங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய மாநகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.2 ஆயிரம் மட்டுமே. ஆனால் இதில் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் மின் மயானங்களில் வெளி நபர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இச்சூழலில் மின் மயானங்களில் முறைகேடுகளை தடுக்கவும், மக்கள் தங்களது கருத்துகள், புகார்களைத் தெரிவிக்கவும் அனைத்து மின் மயானங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன” என்றனர்.