Regional01

நெல்லை மண்டலத்தில் 624 மின்கம்பங்கள் மாற்றம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் கே.செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, கடந்த 19-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை 157 உபமின் நிலையங்களிலும், அதை சார்ந்த மின்தொடர்களிலும் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாள் முழுவதும் மின்தடை செய்யாமல் 3 மணிநேரம் மட்டுமே மின்விநியோகம் நிறுத்தப்பட்டு, அந்தந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர். மொத்தம் 624 உடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 1,252 சாய்ந்த மின்கம்பங்கள் நிமிர்த்தி சரிசெய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற பராமரிப்பு பணிகள் காரணமாக மின்பாதைகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மின்சாரம் சம்பந்தமான புகார்களை பொதுமக்கள் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் மற்றும் 9498794987 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பி.செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT