திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கல்தாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் தொழிலாளி ஜெகன்நாதன். இவர், தனது அண்ணன் வீட்டுக்கு குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். பின்னர் அவர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 1 கிலோ 400 கிராம் எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 600 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து வாணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.