கைத்தறித் தொழிலைப் பாதுகாக்க மானிய விலையில் சிட்டா நூல்கள், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என மதுரை கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதுரை செல்லூர் பகுதியில் அதிகளவில் இயங்கி வந்த தனியார் கைத்தறி நெசவுக் கூடங்கள் பல்வேறு நெருக்கடிகளால் மூடப்பட்ட நிலையில், தற்போது 10 நெசவுக் கூடங்களே இயங்குகின்றன. தனியார் கைத்தறி நெசவுக் கூடங்களுக்கு அரசு வழங்கிய 200 யூனிட் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. ஆனால், பவர் தறிகளுக்கு மட்டும் 500 யூனிட் மின்சாரத்தை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
கரோனா தொற்றால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கைத்தறி நெசவுக் கூடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்து வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.
கடந்த 6 மாதங்களாக தனியார் நூற்பாலைகள் சிட்டா நூல் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஏற்றுமதி ரகங்களையே உற்பத்தி செய்கின்றன. இதனால், கைத்தறிக்குப் பயன்படும் நூல் விலை கடந்த 6 மாதங்களாக பண்டல் ஒன்று (5 கிலோ) ரூ.350 வரை உயர்ந்துள்ளது.
கைத்தறித் தொழிலைப் பாதுகாக்க பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை முறைப்படுத்துவதோடு நூல் விலையேற்றத்தையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். சிட்டா நூல்கள் மானிய விலையில் கிடைக்கவும், முன்பு வழங்கிய 200 யூனிட் இலவச மின்சாரத்தை மீண்டும் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.