மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு :

மதுரையில் ரூ.70 கோடியில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பலனளிக்கும். இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறோம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என 2017-18-ல் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளாகியும் இதுவரை நூலகம் அமைக்கவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்தபடி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, தமிழகத்தில் 7 சிறப்பு நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் இசை, நடனத்துக்கு தஞ்சையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மதுரையிலும், தமிழ் மருத்துவத்துக்கு நெல்லையிலும், பழங்குடியினர் கலாச்சாரத்துக்கு நீலகிரியிலும், கணிதம் மற்றும் அறிவியலுக்கு திருச்சியிலும், அச்சுக் கலைக்கு சென்னையிலும், வான் இயலுக்கு கோவையிலும் தனித்தன்மையான நூலகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்கு பழந்தமிழர் நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. இந்த நூலகத்தால் தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன்தரும்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தினுள் நுழைந்து வெளிவர ஒரு நாள் போதாது. அதைப் போல, மதுரையில் அமையப் போகும் கலைஞர் நூலகமும் இருக்கும். இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE