ஈரோடு: கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அளவில் கோவைக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஈரோடு 2-வது இடத்தில் உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் மற்றும் கரோனா பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாராவது வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் சுகாதாரத்துறை கட்டுப்பாடு அறை 0424 2430922, காவல் கட்டுப்பாடு அறை 0424 2266010, ஆட்சியர் அலுவலக கட்டுப்பாடு அறை 0424 2260211 உள்ளிட்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதோடு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.