Regional01

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பேருந்து : சிஐஐ சார்பில் வழங்கல்

செய்திப்பிரிவு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் படுக்கை, இருக்கை வசதியுடன் ஆக்சிஜன் பேருந்து வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் ஆக்சிஜன் பேருந்தை இந்திய தொழிற் கூட்டமைப்பு கரூர் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

பின்னர், கரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் கிளை மற்றும் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சார்பில் ரூ.2.80 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய தொழிற் கூட்டமைப்பு கரூர் கிளை சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்தப் பேருந்தில், ஆக்சிஜன் வசதியுடன் 3 படுக்கை மற்றும் 7 இருக்கைகள் உள்ளன. தேவையை பொறுத்து நோயாளிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று நோயாளிகளை அழைத்து வரவும், சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இரா.முத்துச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், இந்திய தொழிற் கூட்டமைப்பு கரூர் கிளைத் தலைவர் புஷ்பராஜன், துணைத்தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT